வியாழன், 27 அக்டோபர், 2016

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மோடியின் கொடும்பாவி எரித்தும் போராடிய நமது தோழர்கள் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் சிறைவாசம் அனுபவித்து பிணையில் வெளி வந்திருக்கிறார்கள். அவர்களில், தமிழ்த்தேசமக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரான தோழர் செந்தமிழ்குமரனுக்கு வாழ்த்து தெரிவித்த போது அவர் சில சுவாரஸ்யமான சிறைச் சம்பவங்களை என்னிடம் கூறினார். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

தோழர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு செங்கல்பட்டு கிளை சிறைக்குள் நுழைந்ததுமே சிறை அதிகாரிகள் அவர்களிடம் கெடுபிடி காட்டியிருக்கிறார்கள். அப்போது தோழர்கள் அதை வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். சட்டென சிறை அதிகாரி ஒருவர் அதிர்ந்து போய் ‘நீங்கள் என்ன நக்சலைட்டா? தமிழ்நாடு விடுதலைப் படையா?’என விசாரித்திருக்கிறார். பிறகு, தோழர்கள் சிறை அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவரான தோழர் சதுரைப் பிரபாகரன் ‘என்ன தோழர் நக்சலைட்டா? என கேட்கிறார்கள். சிறை அதிகாரிகளுக்கு நக்சல்பாரிகள் என்றால் அவ்வளவு பயமா?” என வினவியிருக்கிறார்.

அதற்கு தோழர் செந்தமிழ்குமரன் “ஆமாம் தோழரே, நக்சல்பாரிகள் சிறைகளில் நடத்திய போராட்டங்கள் ஏராளம். குறிப்பாய், புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் போன்றவர்கள் சிறைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே நக்சல்பாரி தோழர்கள் பலரும் போராடியிருக்கிறார்கள். மேலும், தோழர் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்...’ நாவலில் சில சிறைப் போராட்டங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன” என விளக்கியிருக்கிறார்.

உடனே ஆர்வமான சதுரை பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் “அப்படியா, தறியுடன் நாவல் படிக்க வேண்டுமே” என கேட்டிருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற் போல தோழர்களுக்கு பிணைக் கிடைக்க கால தாமதம் ஆகியிருக்கிறது. இந்த சமயத்தில் தோழர்களை மனுப் பார்க்க வந்தவர்களிடம் தறியுடன் உள்ளிட்ட சில புத்தகங்களை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ள அவர்களும் மறுநாளே, அவற்றை சிறைத் தோழர்களிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். அங்கே, தறியுடன் நாவல் படிக்கப்பட்டு அதன் மீதான விவாதமும் நடந்திருக்கிறது.

தமது முன்னோடிகள் செய்த விலை மதிக்க முடியாத வீரஞ்செறிந்த போராட்டங்களால் தான் சிறையில் நமக்கு மரியாதை தரப்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்ட தோழர்கள், தறியுடன் நாவலில் வருவது போலவே சிறைப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என உறுதி பூண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஒருநாள் சிறையில் கஞ்சா பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக் கொண்டு சிறை நிர்வாகம் அனைத்துக் கைதிகளுக்கும் தண்டனையாக கொசுவர்த்தியை தடை செய்திருக்கிறது. அவ்வளவுதான், தோழர்கள் மற்ற கைதிகளை ஒருங்கிணைத்து தவறு செய்யாதவர்களுக்கு ஏனிந்த தண்டனை? என குரல் கொடுக்க, மேலதிகாரிகள் வந்து அவர்களது போராட்டத்திற்கு செவி மடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, கொசுவர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு சில கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு போராட்டம் வெற்றியடைய தோழர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

சிறையில் போராட்டக்களத்திற்கு ‘தறியுடன்...’ நாவல் காரணமாய் விளைந்ததை தோழர்கள் கூறிய போது மிக மனநிறைவாய் உணர்ந்தேன். நாவல் எழுதப்பட்ட நோக்கம் அடக்குமுறைக்கு எதிராய் போராடத் தூண்டுவதுதான். இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக படைக்கப்படுவதல்ல, அது மக்களுக்கானது...