ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

செப்டம்பர்- 12 தியாகிகள் நினைவு தினம்.

தமிழக நக்சல்பாரி இயக்க வரலாற்றில் தங்கள் இன்னுயிரை ஈந்து மக்கள் பணியாற்றிய தோழர்கள் பலரையும் நினைவு கூறவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. தோழர் எல்.அப்பு கோவை நகரின் கோட்டைமேடு பகுதியைப் பூர்வீகமாய் கொண்டவர். அவரது இயற்பெயர் அற்புதம். தந்தையாரின் பெயர் லியோ.  அற்புதம் என்ற பெயர் பிறகு எல்.அப்புவாய் மாறியது. தனது சமூக வாழ்வின் தொடக்கத்தில்  தோழர் ராவுண்ணியுடன் இணைந்து   பத்திரிக்கை தொடங்கிய நிலையில் இந்திய பொதுவுடமைக் கட்சி [மார்க்சிஸ்ட்] அமைப்பில் இணைந்த அவர்.  அதன் நாளிதழான ‘தீக்கதிர்’ பத்திரிக்கையின் முதல் ஆசிரியராவார். பின்பு, அகில இந்திய அளவில் அந்த அமைப்போடு கொள்கை ரீதியாய் முரண்பட்டு தோழர் சாருமஜீம்தார் தலைமையிலான புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்தார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி  கிராமத்தில் உருவான உழவர் போராட்டத்தின் காரணமாய்  சாருமஜீம்தார், கனுசன்யால், ஜங்கர் சந்தால் ஆகியோருடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்] அமைப்பு உருவாக காரணமாய் இருந்தார்.

அந்த கட்சியே பின்னாளில் நக்சல்பாரிக் கட்சியென அழைக்கப்பட்டது. நக்சல்பாரி கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் வெகுண்டெழுந்த உழவர் போராட்டத்தை அன்றைய செஞ்சீனத்தின் தமிழ்  வானொலி ஒலிப்பரப்பு‘வசந்தத்தின் இடி முழக்கம்’ என்று வர்ணித்தது.

நக்சல்பாரி அமைப்பு தொடக்கத்தில் அழித்தொழிப்புக் கொள்கை என்ற வழிமுறையை தனது நடைமுறை தந்திரமாய் பின்பற்றியது. அதன் விளைவாய் தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கொடிய நிலவுடமையாளர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்த வீரஞ்செறிந்த உழவர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை உருவாக்கியது. தோழர் எல்.அப்பு பல்வேறு அழித்தொழிப்பு நடவடிக்கையால் போலீசால் தேடப்பட்டு வந்தார். ஆயினும், அவர் தனது தலைமறைவு காலத்திலும் கூட வீதி நாடக கலை வடிவத்தைக் கையிலெடுத்து தான் அதில், பண்ணையாராக நடித்தார். அதனாலேயே அவர் கூலி விவசாயிகள் மத்தியில் பண்ணையார் தோழர் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

1970களில் வேலூரில் ஒரு தங்கும் விடுதியில் இருந்து அவரை போலீசார் பிடித்துச் சென்றனர். இன்று வரையிலும் அவரை என்ன செய்தார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது. அழித்தொழிப்புப் பாதையின் தளகர்த்தாவாய் இருந்த எல்.அப்பு. நக்சல்பாரி வரலாற்றில் தமிழக நாயகனாவார்.

தோழர் பாலன். தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்ஸி பட்டம் பெற்றவர். அவர் நக்சல்பாரி வழிமுறையால் ஈர்க்கப்பட்டு, தனது புரட்சிகர வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தார். முதலில், மிக கொடுமையான கந்து வட்டிக்காரன் நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியை மற்ற தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழித்தார். அதில், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தன் தண்டனைக் காலம் முடிந்து சேலம் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, தோழர் பாலன் சற்றும் சோர்வில்லாமல் அநீதிகளுக்கு எதிராய் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்கிறார்.

அந்த நேரம் தோழர் சாருமஜீம்தாருக்குப் பின்னால், நக்சல்பாரி இயக்கம் பிளவுண்டிருந்தது. கூட்டக்குழு என்ற பெயரில் தோழர்கள் தமிழ்வாணன், ஏலகிரி இராமன், தமிழரசன் போன்றவர்கள் ஒரு பிரிவாய் இயங்கி வந்தார்கள். அதுவே பின்னாளில் ஆந்திரத்துடன் இணைந்து மக்கள் யுத்தக் குழுவாய் மாறியது.  அவர்களின் வழி காட்டுதலை ஏற்று மக்கள் யுத்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் தோழர் பாலன். அவரது போராட்ட வழி முறைகள் ஆதிக்க பண்ணைகளை நடுங்க வைத்தன. சாதிவெறியர்கள் பதைத்தார்கள். இதன் விளைவாய் அரசு அவர்களைப் பாதுக்காக்க வால்டர் தேவாரம் என்பவரை வடாற்காடு மற்றும் சேலம் தர்மபுரி டி.ஐ.ஜி யாக நியமித்தது.

திருப்பத்தூரில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தை சாக்காக வைத்து தேவாரம் ‘நக்சலைட்டுகளை’ ஒடுக்குவதாய் கூறி, புரட்சியாளர்களை அழித்தொழிக்க தொடங்கினான். அவனது நரவேட்டைக்கு முதல் பலி தோழர் பாலன். 1980 செப்டம்பர் 9 ந்தேதி இரவு  தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் அருகிலுள்ள சீரியம்பட்டி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலனையும் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்களையும் பெரும் படையுடன் வந்து கைது செய்கிறான் தேவாரம். தோழர் பாலன் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகிறார். அங்கே, கடுமையான போலீஸ் சித்ரவதையில் அவரது கால் முறிக்கப்படுகிறது.

அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் குற்றுயிரும்,குலையுயிருமாய் கொண்டு வந்து சேர்க்கிறது போலீஸ். அவர் இறந்து விடுவார் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தோழர் பாலன் மேல் மரியாதை உடைய மருத்துவர்கள் அவரை குணமாக்க முயல, கோபம் கொண்ட தேவாரம் வலுக்கட்டாயமாய் பாலனை சென்னைக்கு தூக்கிச் செல்கிறார். வழியிலேயே போலீஸ் வேனில் சித்ரவதை தொடர்கிறது. சென்னை அரசு மருத்துவமனைக்கு பாலன் கொண்டு வரப்பட, அங்கேயும் சில மனிதாபிமானமுள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயல, அவர்கள் தேவாரத்தால் மிரட்டி தடுக்கப்படுகிறார்கள். சாகும் தறுவாயில் தனக்கு மருத்துவம் பார்க்க முயன்ற அந்த டாக்டரை அருகில் அழைத்து ‘நீங்கள் கிருத்துவரா?’ எனக் கேட்டு ‘இந்த உலகத்தை மீட்க வந்த இயேசு நாங்கள் தான். நக்சல்பாரி பாதையில் இந்த நாடு வறுமையில் இருந்து ஒருநாள் மீளும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்க’ என்று கூறி இறந்திருக்கிறார் தோழர் பாலன்.

மருத்துவமனையில் பலரும் அழுதிருக்கிறார்கள். அதன் பின், போலீஸ் தோழர் பாலனின் உடலைக் கூட அவரது பெற்றோரிடத்தில் ஒப்படைக்கவில்லை. வெறும் சாம்பலைத்தான் தருகிறார்கள். தோழர் பாலன் இறந்ததை கேள்விப்பட்டு சிறையில் இருந்த தோழர் தமிழரசன் கலங்கியிருக்கிறார். எதற்குமே கலங்காத அவர் மனம் ‘தன்னலமில்லாத புரட்சியாளன் தோழர் பாலனை  இழந்து விட்டோமே’ என கசிந்துருகி இருக்கிறது.

உழைக்கும் மக்களின் அன்புக்குரிய தோழர் பாலன் இறந்தது செப்டம்பர் - 12 நாள். அவரது நினைவாய் தான் அனைத்து\நக்சல்பாரி தியாகிகளுக்கும் நினைவு தினம் அந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது. தோழர்கள் இருவருக்கும் தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில், நாய்க்கன் கொட்டாயில் 1984 ல் சிலை நிறுவப்பட்டது.

என்னுடைய ‘தறியுடன்...’ நாவலில் தோழர் பாலன் பற்றியும், அப்பு -பாலன் சிலை திறப்பு விழாவில் நேரடியாய் கலந்துக் கொண்டவன் என்ற முறையில் அந்த மாபெரும் நிகழ்வை பற்றியும்,  இன்னும் விரிவாய் எழுதியுள்ளேன். தோழர் பாலனுக்கு நாவலை சமர்ப்பித்திருக்கிறேன்..

‘எல்.அப்புடா... எங்கள் தலைவரடா...
ஹேய்... எல்.அப்புடா... எங்கள் தலைவரடா...’

‘அணையாத தீபமானாய் தோழா...
எங்கள் பாலா...’

வியாழன், 1 செப்டம்பர், 2016


அந்த காலை நேரத்தில் வழக்கம் போலத்தான் விசைத்தறிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். காலை உணவு நேரம். வழியில் எதிர்ப்பட்ட தொழிலாளி ஒருவர் ‘ஒங்கூட்டுக்கு ஒறம்பர வந்திருக்குறாங்க...’ என்று போகிற போக்கில் ஒரு தகவலாய் சொல்லி விட்டுச் சென்றார். எனக்கு மனதுக்குள் சின்ன சிரிப்பு எழுந்தது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கும், மனைவிக்கும் உற்றார் உறவினர்கள் ஊரில் இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட எங்களைத் தேடித்தான் அவர்கள் யாரும் வருவதில்லை. எனவே, வீட்டுக்கு தோழர்கள் யாராவது தேடி வந்திருப்பார்கள் என்றுதான் நினைத்தபடி நடந்தேன்.

ஆனால், தோழர் தமிழரசன் தேடி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அதற்கு முன், அவர் அப்படி வந்தவர் அல்ல. மேலும், அவர் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேறி  தமிழ்  தேசிய இனப் போராட்டத்தை முன்னிறுத்தி தனி அமைப்பு கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் மக்கள் யுத்தக் குழுவில் முரண்பட்டு வெளியேறும் எண்ணத்துடன் இருந்தேன். இந்த சமயத்தில் தான் தோழர் அதை யார் மூலமாகவோ தெரிந்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருந்தார். தோழரை மக்கள் யுத்தத்தில் இருந்த சமயத்தில் ஓரிருமுறை   சந்தித்து இருக்கிறேன். 

என்றாலும், நெருக்கமான பழக்கமில்லை. ஏனெனில், நானும், தோழரும் வெவ்வேறு மாவட்டங்கள் என்பதால், நெருங்கிப் பழக வாய்ப்பில்லை. 

நான் வீட்டை அண்மித்த தருணம். தோழர் சட்டையை கழட்டி வைத்து விட்டு, வீட்டு வாசலில் மண்டிக் கிடந்த புற்களை அகற்றிக் கொண்டிருந்தார். எனவே, என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. ஆனால், வந்திருப்பது யார்? என்று தெரிந்ததும் ஆச்சரியம் தாளவில்லை. ‘தோழர்..’ என்று நான் அழைத்ததும் நிமிர்ந்துப் பார்த்து சிரித்தார்.  ‘எப்ப வந்தீங்க?’ என்று கேட்டதற்கு ‘ஏழு மணிக்கே வந்துட்டேன் தோழர். அத வுடுங்க... வூட்டு வாசலை ஏன் இப்படி வச்சிருக்கீங்க?’ என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர் வேலை துவங்கப் போக, நான் தடுத்தேன். 

பிறகு, மனைவியிடம் ‘எதுக்கும்மா... தோழரை இந்த வேலையெல்லாம் செய்ய விட்டே?’ என்று கேட்டு முடிப்பதற்குள் ‘நா என்ன விருந்தாளியா? தோழர்’ என்று மேலே பேச விடாமல் தடுத்தார் தமிழரசன். பொதுவாகவே நக்சல்பாரி தோழர்கள் சக தோழர்கள் வீட்டுக்குச் சென்றால், தங்கள் சட்டையை கழட்டி விட்டு ஒரு துண்டை போர்த்திக் கொண்டு மண் தரையாக இருந்தாலும், சகஜமாய் உட்கார்ந்து விடுவார்கள். வெளியிலிருந்து யார் வந்தாலும் வந்திருப்பவர் வெளியூர்காரர் என்ற தோரணையை தவிர்க்கவே இந்த நடைமுறை. 

அதே சமயம், தோழர்களின் இந்த இயல்பான நடவடிக்கை அவர்கள் தோழர்கள் தான் என்பதை வீட்டில் இருப்பவர்களுக்கு தெளிவாய் தெரிவித்து விடும். சில சமயம், உளவுத்துறை ஆட்கள் தோழர்கள் என்ற போர்வையில் ஆண்கள் யாருமில்லாத நேரத்தில் தங்களை தோழர்களாய் கூறிக் கொண்டு பெண்களிடம் யார்,யாரெல்லாம் வீட்டுக்கு வருகிறார்கள். தோழர் இப்போது என்ன  இயக்கப் பணி செய்கிறார்? என்பதையெல்லாம் நைசாகப் பேசி தெரிந்துக் கொள்ள முயல்வார்கள். ஆனால், அவர்கள் யார்? என்பதை  பட்டும் படாமல் இருக்கும் நடவடிக்கையால் பெண்களுக்கு மட்டுமல்ல அக்கம் பக்கத்து ஆட்களுக்கும்  தெளிவாக தெரிந்து விடும். 

தோழர் தமிழரசன் இன்னும் எளிமையானவர். இல்லையென்றால், தன் சொந்த வீடு போல, என் வீட்டு வாசலில் மண்டிக் கிடக்கும் புற்களை செதுக்க 
முனைவாரா? அடுத்த மூன்று நாட்கள் தோழர் தங்கியிருந்தார். பல்வேறு அரசியல் விடயங்கள் பேசினோம். சில கருத்து முரண்பாடுகள் நீடித்தன. மீண்டும் தோழரை சந்திப்போம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், எதிரிகள் அவரை வெகு சீக்கிரம் கொன்று விட்டார்கள். அவர் இறப்புச் செய்தியை நான் என் மனைவியிடமும், அந்த சில நாட்களில் அவருடன் ஐக்கியப்பட்டிருந்த அருகாமை வீட்டாரிடம் சொன்னேன். ஏதோ அவர்கள் தங்களில் ஒருவரை இழந்து விட்டதாய் துக்கப்பட்டார்கள்.