புதன், 25 மே, 2016

கேரளத்தில் உள்ள மலையாளிக் கவுண்டர்கள் மற்றும் நரிக்குறவர்கள் உள்ளிட்ட எளிய மக்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் மத்திய அரசு சேர்த்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது தான். அந்த மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது சரியானதே. ஆனால், இவற்றைச் செய்யும் மத்திய அரசை இன்னொரு கோணத்தில் நாம பார்க்க வேண்டியுள்ளது. ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பழங்குடியினர் நலனில்  இதே மத்திய அரசு என்ன நிலை எடுத்து வருகிறது? கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு துணை நிற்கிறது. இதுதான் உண்மையில், பழங்குடியினர் நலனில் மத்திய அரசு காட்டும் அக்கறையா? அங்கே, துணை ராணுவத்தை வைத்துக் கொண்டு அப்பாவி வனவாசி மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப் பார்க்கிறது. பழங்குடியின மக்கள் தங்களுக்கு எதிரான நிறுவனங்களை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களை ஆயுத முனையில் நசுக்குகிறது அரசாங்கம். வேறு வழியில்லாமல் மரபு வழி ஆயுதம் ஏந்தும் மக்களை ‘மாவோயிஸ்ட்கள்’ என்று முத்திரை முத்துகிறது. முன்னணியினர் பலரைக் கைது செய்து சிறையில் வருடக்கணக்கில் அடைக்கிறது. இதெல்லாம் தான் மத்திய அரசின் பழங்குடியினர் நலனா? கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசு. அதை பழங்குடியினர் செங்குருதியில் அல்லவா செய்கிறது. எனவே, ஏதோ சில சலுகைகளை எளிய மக்களுக்கு கொடுத்து விட்டு தனது கனிம வளக் கொள்ளையின் ஆதரவு நிலையை மக்களின் கண்களில் மண் தூவி மறைக்கப் பார்க்கிறது. தீவிரவாத ஒழிப்புப் பிரிவு எனும் சீருடைப் படையை வைத்துக் கொண்டு அங்கே மத்திய மாநில அரசுகள் செய்யும் கொடுமைகள் கொஞ்சமா? நஞ்சமா? பழங்குடியினப் பெண்களில் பலர் அதிலும், இள வயதுப் பெண்கள் தங்கள் மண் காக்க ஆயுதம் ஏந்துகிறார்கள் என்று தெரிந்துக் கொண்ட சீருடைப் பட, திருமண ஆகாத பெண்களை தங்கள் முகாம்களுக்கு கொண்டு சென்று சித்ரவதை செய்கிறார்கள். இதனால், அங்கே சிறுவயது திருமணங்கள் அதிகம் நடப்பதாய் கூறப்படுகிறது. பெண்களின் மார்பகங்களில் பால் சுரக்கிறதா? அவர்கள் திருமணம் ஆகி குழந்தைப் பெற்றவர்கள் தானா? என்று சோதிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது மத்திய அரசின் ஆயுதப்படை. இதெல்லாம் எதற்காக மலைவாழ் மக்களை விரட்டி விட்டு அவர்களின் கனிம வளத்தைக் கொள்ளையடிக்கத்தானே. அப்புறம், எங்கிருந்து வந்தது மத்திய அரசின் எளிய மக்கள் பற்றிய அக்கறை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக