புதன், 25 மே, 2016

எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன்:

விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாய் தரப் போவதாய் ஆட்சிக்கு வந்திருக்கிறது அதிமுக அரசு. உண்மையில் இந்த இலவசத்தால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்களுக்கு பெரிதாய் நன்மையில்லை. ஏனெனில், மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் இந்த கோடைக் காலத்தில் மின் கட்டணத்தையே ரத்து செய்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்த இலவசம் வாக்காளர்களை கவர தேர்தல் காலத்து கவர்ச்சி அறிவிப்பே தவிர, உண்மையில் காலாவதியான ஒன்றே. வெளியில் இருந்துப் பார்க்கும் பலருக்கும் ஏதோ முதல்வர் விசைத்தறியை வாழ வைத்து விட்டார் என்று வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், வெறும் கண் துடைப்பே இந்த 750 யூனிட மின்சாரம் என்பது. இதற்குப் பதிலாய் உண்மையில் இந்த அரசு விசைத்தறியாளர்கள் மீது அக்கறைக் கொண்டிருந்தால், சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே  தயாரித்து உபயோகப் படுத்துவதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரலாம். இதற்கு மத்திய அரசு மான்யமாய் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறது. அதைக் கேட்டுப் பெற மாநில அரசு முயற்சி செய்யலாம். இதனால், அரசு தரும் மின்சாரத்தை சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் நம்பி இருக்கத் தேவையில்லை. அரசாங்கம் அதிக விலைக் கொடுத்து மின்சாரத்தை வெளியாரிடமிருந்து வாங்கவும் தேவையில்லை. ஏற்கனவே மின் வாரியம் பல கோடி இழப்பில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக மக்களின் கடன் சுமையை குறைக்கும் முயற்சியில் இறங்கலாம். இதைத் தான் விசைத்தறியாளர்களும் விரும்புகிறார்கள். அடுத்து கைத்தறிக்கு வாரியம் அமைத்து கூட்டுறவு சங்கங்களில் ஜவுளிக் கொள்முதல் செய்வது போலவே, விசைத்தறி துணிகளையும் கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கள் இன்றைக்கு தேவையாய் இருக்கிறது. அப்படி அரசு செய்யுமானால் அதுதான் உண்மையான அக்கறையாய் இருக்க முடியும். தமிழகத்தின் மேற்கு மண்டலங்களில் ஜவுளிப் பூங்காக்கள் செயல்படுகிறது. அவற்றில் ஜெட்லூம் எனப்படும் நவீன விசைத்தறிகள் இயங்குகிறது. இஅவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தரப்படுகிறது. இந்த முறையை மாற்றி பீஸ் ரேட் எனப்படும் நெய்யப்படும் துணிகளின் நீளத்திற்கேற்ற சம்பளம் தரப்பட வேண்டும். அப்போதுதான் ஓரளவாவது உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். மேற்கு மாவட்டங்களுக்குத்தான் இந்த முறை அதிமுக மந்திரி சபையில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான விசைத்தறி தொழிலில் உள்ள இடையூறுகளைக் களைய முயல வேண்டும். செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக