ஞாயிறு, 29 மே, 2016

நேற்று சென்னை இக்சா அரங்கில் வாசகசாலை அமைப்பின் சார்பாய் முழுநாள் இலக்கிய கருத்தரங்கு நடந்தது. இதில், நான்காம் அமர்வாய் ‘அரசியல் நாவல்கள்’ என்ற தலைப்பில் பேச நண்பர்கள் அழைத்திருந்தார்கள். மதிய நேரத்துக்கு மேல் தான் நான் பேசும் அரங்கு என்றாலும், காலையில் முதல் அமர்வுக்கே  சென்று விட்டேன். மற்ற அரங்குகளில், என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். முதல் அமர்வில், தமிழ் நாவல்கள் சினிமாவில் எப்படிப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதன் சாதக பாதகங்கள் பற்றி அலசப்பட்டது. இயக்குனர் கரு. பழனியப்பனும் அதில், கலந்துக் கொண்டு பேசினார். முதலில் பேசிய கவிஞர் சாம்ராஜ்  தமிழ் நாவல்கள் திரைப்படங்களாய் மாறும் போது பெரும்பாலும் அரை குறையாய் தான் முடிகின்றன என்று சில நாவல்களையும் அது திரைப்படமாய் மாறிய போது எப்படி இருந்தன? என்று அலசினார். குறிப்பாய் மோகமுள் நாவலுக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்தார். அடுத்துப் பேசிய சுபகுணராஜன் நாவல்களை திரைப்படமாக்கும் கலையில் இயக்குனர் மகேந்திரனின் நேர்த்தியைப் பாராட்டினார். முள்ளும் மலரும் நாவல் திரையில் இன்னும் சிறப்பாய் வந்துள்ளதை எடுத்துச் சொன்னார். புதுமைப் பித்தனின் சிற்றன்னை சிறுகதை படமாக்கப்பட்டது மிகச் சிறப்பு என்று கூறினார். பிரபாகரன் அடுத்துப் பேச முடிவில் கரு. பழனியப்பன் சினிமாக்காரர்களிடம் இலக்கியத்தை நோக்கி நகரும் தன்மை தற்போது இல்லை. இலக்கியவாதிகள் திரைப்படத்தை நேக்கி வாருங்கள் என்று கூறினார். இந்த அமர்வில், எனக்கிருந்த விமர்சனம்  கம்யூனிச எழுத்தாளர்களின் நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் சுட்டவில்லை. குறிப்பாய் டி.செல்வராஜ் எழுதிய தேநீர் நாவலைப் பற்றியும், அது குடிசை ஜெயபாரதி இயக்கத்தில் வெளி வந்தது பற்றியும் எவரும் சொல்லவில்லை.

அடுத்த அமர்வாய் அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி மற்றும் கவிஞர் உமாதேவி ஆகியோர் ஒரு கலந்துரையாடலாய் தற்காலப் பிரச்னைகளை  கவிஞர்கள், எழுத்தாளர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் ஏன் தொடுவதில்லை? என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நான் எந்தந்த விசயங்கள் எங்கே தொடப்பட்டிருக்கிறது அதன் படைப்பாளி யார்? என்பதைச் சொன்னேன். குறிப்பாய், குட்டி  ரேவதி கூடங்குளம் அணு உலை பிரச்னைப் பற்றி கவிதை எழுதியது குறித்துப் பேசப்பட்ட சமயத்தில் இடிந்தக்கரை  சுந்தரி என்ற பெண் போராளி கூடங்குளம் போராட்டத்தில் தான் பட்ட அனுபவத்தை நாவலாய் வடித்திருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னேன். நண்பர்கள் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி. உணவு இடைவேளைக்குப் பின், மூன்றாம் அமர்வாய் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள் உரையாற்றினார். அவரிடம் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அவரது பதிலில் சில தகவல்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாய் சிறு துறைமுகங்கள் பற்றி அவர் சொன்ன செய்தியில் பெரு துறைமுகங்கள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு தோதாய் இல்லை என்பதும், மத்திய அரசுகள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாய் இல்லை என்பதும் அறிய முடிந்தது. ஆனால், இந்துத்துவாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இப்போது நினைத்தாலும் பயந்து வருகிறது. அதாவது இந்துத்துவா என்பது பக்குவமாம்.

நான்காவது அமர்வாய் அரசியல் நாவல்களைப் பற்றி முதலில் நான் பேசினேன்.  அதில், அரசியலற்ற நாவல்க என்று எதுவும் இல்லை அப்படி சொல்லும் நாவல்கள் எதுவாய் இருந்தாலும் அவற்றில் நிச்சயமாய் அரசியல் இருக்கும் என்று பேசினேன். எழுத்து என்பது மக்களின் பிரச்னையை சொல்வதாய் இருக்க வேண்டும் என்றும், அது தீர்வை நோக்கிய முன் நகர்த்தலாய் இருப்பது இன்னும் சிறப்பு என்றும் கூறினேன். மக்களின் போராட்டங்களை சொல்லும் நினைவுகள் அழிவதில்லை, தோல், பஞ்சும் பசியும், கீழைத் தீ போன்றவற்றை குறிப்பிட்டு விட்டு இறுதியாய், எனது தறியுடன் மற்றும் வந்தேறிகள் நாவல்களைப் பற்றிப் பேசினேன். நக்சல்பாரி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினேன். ஒரு அரசியல் கருத்தரங்கு போல இருந்தது என்றே பார்வையாளர்கள் கூறினார்கள். எனக்கு அடுத்துப் பேசிய அரவிந்தன் புளியமரத்தின் கதை, ரப்பர் போன்ற வேறு சில நாவல்களைப் பற்றி பேசினார். ஜெயமோகனை அவர் புகழ்ந்த விதம் ஏற்புடையதாய் இல்லை.

இறுதி அமர்வாய் இயக்குனர் பா.ரஞ்சித் உரை நிகழ்த்தும் போது மாலை ஆறு மணியாகி விட்டது. எனக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் பேரவையின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நேரமாகி விட்டதால் அவரிடம் விடைப் பெற்றேன். வேறு நிகழ்ச்சியில் அவர் உரையை கேட்க நேரும் என்று நினைக்கிறேன்.

பொதுவாய் இது போன்ற இலக்கிய நிகழ்வுகளை நடத்தும் நண்பர்கள் தங்களது உழைப்பில் செலவிட்டுதான் நடத்துகிறார்கள். இதற்கென அவர்கள் படும் சிரமத்தை புரிந்துக் கொள்ள இந்த நிகழ்வு வாய்ப்பாய் அமைந்தது. மதிய உணவு நன்றாய் இருந்தது. வாசகசாலை கார்த்திகேயன் வெங்கட்ராமன், த. ராஜன் இன்னும் பெயர் தெரியாத நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு நண்பரே! தங்களின் தளத்துக்கு இப்போதுதான் வருகிறேன். நன்றாகவே அமைந்துள்ளது; இனி தொடர்வோம். வாழ்த்துகள்! முகநூலின் தங்கவேலு ராஜேந்திரன்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு நண்பரே! தங்களின் தளத்துக்கு இப்போதுதான் வருகிறேன். நன்றாகவே அமைந்துள்ளது; இனி தொடர்வோம். வாழ்த்துகள்! முகநூலின் தங்கவேலு ராஜேந்திரன்

    பதிலளிநீக்கு