வியாழன், 16 ஜூன், 2016

ஈழத்தைச் சேர்ந்த தோழர் நந்தினி சேவியர் சமீபமாகத்தான் எனக்கு அறிமுகம். அதிலும், என்னுடைய ‘தறியுடன்...’ நாவலை அவர் படித்தப் பின்னால்,  அதன் பின்னட்டையில் இருந்த ஒரு பத்தியை அவர் முகநூலில் பதிவிட்ட பின்புதான் தெரிந்தது அவர் யார் என்று. அரை நூற்றாண்டுகளாய் ஈழத்தில் முற்போக்கு இலக்கிய ஆளுமையாய் இருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி தற்போது தான் தெரிய வந்திருக்கிறது என்றால், அது என் தேடலின் குறை என்று தான் கூற முடியும். 2016 புத்தகக் காட்சியில் விடியல் அரங்கில் அவரது ‘நந்தினி சேவியர் படைப்புகள்’ ஒரே புத்தகமாய் எனக்குக் கிடைத்தது. இயல்பிலேயே மிக நிதானமான வாசிப்புப் பழக்கத்தைக் கொண்ட எனக்கு அவருடைய புத்தகத்தை ஒரே நாளில் படிக்க முடிந்தது ஆச்சரியந்தான். அதற்கு காரணம் அதிலிருந்த எளிமையா அல்லது மனதுக்கு நெருக்கமான எழுத்துக்களா என்பதை பகுத்துணர்வது சிரமம் தான்.

முதலில், நான் வாசித்த அவரது சிறுகதைகளில் பலவும் தெளிந்த நடையுடனும், சிறப்பான உள்ளடக்கத்துடனும் இருந்தன. அநாவசிய வர்ணனைகள் இன்றி பளிச்சென்ற விதத்தில் அவை இருக்கின்றன என்று கூறினால் மிகையல்ல. ‘தொலந்துப் போனவர்கள்’ சிறுகதையில் இன உரிமைப் போரினால் எதிரிகளால் சிதைக்கப்பட்ட அந்த நகரம் மனதை விட்டு அகலவில்லை. ஏதோ நானே அந்த நகரத்தில் வசித்து தொலைந்துப் போனவர்களில் ஒருவனாய் மாறி விட்டதாய் தோற்றம். மானுடம் யுத்தக் களங்களில் எப்படியெல்லாம் தோற்கடிக்கப்படுகிறது என்பதை நினைக்கும் போது நீண்ட பெருமூச்சொன்று எழுகிறது.

‘வேட்டை’ சிறுகதையில் ஒரு வளர்ப்புப் பிராணியான நாய்க்கும், அந்த தம்பர் தாத்தாவுக்குமான உறவு அற்புதமானது. ‘வெள்ளையா... அதுக்குள்ளான் கிடக்கு... விட்டிடாதை... எழுப்படா... ‘ என அவர் தன் வேட்டை நாயை இரைக்காக உசுப்பும் போது, அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இறுதியில் வெள்ளையனின் மரணம் மனதைக் கனக்கச் செய்கிறது.
  ‘அயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்” சிறுகதை ஒரு சமூகப் பார்வையின் பால் எழுதப்பட்ட அருமையான கதை. ஒரு சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும், அதற்கான தீர்வும் சொல்லப்பட்டிருப்பது அழகு.
  ‘ஒரு பகற் பொழுது’ சிறுகதை சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனப்பாங்கு பற்றிய பண்பாட்டைச் சொல்கிறது. அதுவும் அருமை.

தோழர் தனது மாவோ சிந்தனையாற்றலை தனது கட்டுரைகள் வாயிலாய் விவரிக்கிறார். அதனூடே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான விதம் பற்றிக் கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அமரர் பா.ஜீவானந்தம் அவர்களே மார்க்சிய தொடர்புகளுக்கு காரணம் என அறியும் போது, தோழர் ஜீவாவை எண்ணி மனம் பெருமைக் கொள்கிறது. டானியல், டொமினிக் ஜீவா, போன்றோர் அவரால் வென்றெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் பின், ஏஜே கனகரட்ணா, கைலாசபதி, என்.கே ரகுநாதன், சிவத்தம்பி, எஸ் பொ என்றழைக்கப்படும் பொன்னுதுரை, செ, கணேசலிங்கன் போன்ற முற்போக்குப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பை உணர முடிகிறது.

தோழர் நந்தினி சேவியர் அவர்கள் வெறும் எழுத்தாளராய் மட்டும் இல்லாமல் அறுபதுகளிலேயே தீண்டாமை ஒழிப்பில் இயக்கம் சார்ந்து போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார். அவர் தலித் எழுத்தாளர் மட்டுமல்ல, சாதி ஒழிப்பை மாவோ சிந்தனை வாயிலாய் தான் நிறைவேற்ற முடியும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாய் உணர்ந்திருக்கிறார். ஆகவே, தன்னை இடதுசாரி எழுத்தாளன் என்று கூறுவதையே அவர் விரும்புகிறார்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாய் இலங்கையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் இருந்தாலும் அவற்றின் பிரதிநிதிகளாய் நிறைய அரசியல் தலைவர்கள் வெளிப்பட்டாலும், தோழர் சண்முகதாசனை பெருமையாய் நினைவு கூர்கிறார். ஈழத்துத் தந்தை என நமக்கு சொல்லப்பட்டவர்களெல்லாம் எவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதிகளாய் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. 1980 க்குப் பிறகான இனப்போர் சூழல் இடதுசாரிகளுக்கு எத்தனை நெருக்கடியான காலமாய் இருந்ததை அறிய முடிகிறது. உண்மையான கம்யூனிஸ்ட்கள் இயக்கங்களின் குறுங்குழுவாதப் போக்கால் எப்படியெல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும், எஞ்சியவர்கள் ஏன் மௌனமாகிப்  போனார்கள் என்பதும் தோழர் நந்தினி சேவியர் வாயிலாய் தெரிய வருகிறது.  அவரது உள்ளக் குமுறலில் சொல்லப்படாத விடயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

தோழரின் வாழ்க்கையை அறியும் போது சமூக மாற்றத்தை விரும்பும்  படைப்பாளிகள் ஊக்கமுடன் தங்கள் பணியை தொடர உத்வேகமளிக்கிறது. ஆனால், தோழர் தன்னடக்கத்தோடு கூறுகிறார் “இளைய தலைமுறை என்னை வாழ்த்த வேண்டும். முதிய தலைமுறை என்னைப் புகழ வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை” என்று.

தோழர் நந்தினி சேவியரின் தொடர்பு என்னைப் பொறுத்தவரை பெருமை கூற வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக