திங்கள், 20 ஜூன், 2016

அரசியல், கலை இலக்கியம் என்று தொடர்ந்து எழுதி வரும் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ புத்தகம் படிக்க நேர்ந்தது. மொத்தம் இருபத்தி எட்டு கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் பல விடயங்களை தனக்கே உரித்த பாணியில் அலசியிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது தொடக்க கால மார்க்சிய அரசியல் தொடர்புகள் பற்றிய கட்டுரைக்குதான் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ என்று தலைப்பிட்டிருக்கிறார். அதுவே, புத்தகத்தின் தலைப்பாய் மாறியிருக்கிறது. அதை ஏன் மணல் மேடாய் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவரின் இன்றைய எழுத்துச் செயல்பாட்டுக்கு அதுதானே அஸ்திவாரம்.

அதில். கோவை ஞானி, எல். அப்பு, எஸ்.வி ஆர், கண்ணாக்குட்டி, எஸ்.என் நாகராசன் போன்றவர்களின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்த அனுபவங்களை எழுதுகிறார். அதே சமயம் அவரது தந்தையாரின் மார்க்சிய அரசியல் ஊடான நிகழ்வுகளையும் அடிக் கோடிடுகிறார். அதனால் தான் சொன்னேன் மணல் மேடு அல்ல, பண்பட்ட நிலம் தான் அவருடைய தொடக்க காலம் என்று. ஆனால், அடிக்கடி நக்சலிசம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அப்படியொரு இசம் எனக்குத் தெரிந்து இல்லை. நக்சல்பாரி இயக்கத்தில் சில ஆண்டுகள் முழுநேர ஊழியனாய் பணியாற்றியவன் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். அதே சமயம் கோவை ஞானியைப் பற்றிய அவரது விமர்சனம் நேர்த்தி. கா. சிவத்தம்பி பற்றிய கட்டுரையில் அவரது மதிப்பீடும் நன்று. ஒரு  இலக்கிய செயல்பாட்டாளன் குறைகளுடன் ஏற்றுக் கொள்ளத் தக்கவன். அவன் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியாய் இல்லாதவரை. தோழர் யமுனா ராஜேந்திரன் கா. சிவத்தம்பியோடு நிறுத்திக் கொள்ளாமல் கைலாசபதி, ஏ.ஜே கனகரட்ணா, நந்தினி சேவியர் போன்ற மார்க்சிய இலக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதலாம். அவரது மற்ற புத்தகங்களில் எழுதியுள்ளாரா? என தெரியவில்லை.

ருஸ்டிக்கும், அருந்ததிராய்க்கும் உள்ள வேறுபாடுகள் குறித்துச் சொல்லும் கட்டுரை நன்று. அருந்ததிராய் எனும் ஆளுமை எனும் கட்டுரையில் அவரது நிறைகளை சிலாகிக்கும் போது அடிப்படையில் அவர் நூதன மார்க்சிய எதிர்ப்பாளராய் இருப்பதை இன்னும் அழுத்தமாய் கூறி இருக்கலாமோ? என தோன்றுகிறது. சத்திய சோதனையின் மீதான வல்லுறவு என்ற கட்டுரை மிகச் சிறப்பு. ஸ்டாலினைப் பற்றிய உங்களது பார்வையில் அவரது எதிர்ப்பாளர்களையே நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் தோழர் யமுனா ராஜேந்திரன். [இலக்கிய இந்துத்துவம்: இடி முழக்கம் மற்றும் கள்ள மௌனம்] பக்கம் 118 ல்  “எனது எழுத்துக்களிலிருந்து ஸ்டாலினிய ஆதரவு தொடர்பான எந்தக் கருத்துக்களையும் அவர்களால் தலை கீழாக நின்றாலும் சுட்டிக் காட்ட முடியாது” என்று நீங்களே கூறுகிறீர்கள். தோழர் ஸ்டாலினைப் பற்றிய புத்தகங்கள் தமிழிலேயே இரண்டு மிகச் சிறப்பாய் வந்திருக்கின்றன.

 ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்- எம். ஆர் அப்பன்
ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் - குரோவர் ஃபர் [தமிழில் செ.நடேசன்]

என்னைப் போன்ற தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இவை வரப்பிரசாதம். உங்களைப் போன்ற ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கு இன்னும் ஸ்டாலின் பற்றிய உண்மைகள் அறிய வாய்ப்பு அதிகம்.

தோழர் மாவோவின் ஸ்டாலின் பற்றிய வரையறை இன்றும் உயிருடன் உள்ளது என்பது என் கருத்து. மற்றபடி, போர்னோகிராபி இலக்கிய உலகம்- பீடபைல் கட்டுரை தமிழுக்கு புதிது. அருமை. ஜெயகாந்தனைப் பற்றிய இரு கட்டுரைகளும் அப்படியே.

ஸ்ரீவித்யா பற்றிய கட்டுரையில் அவர் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறீர்கள். ஆனால், அவரது சமூகப் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுகிறது. அவரோடு ஒப்பிடும் போது சில்க் சுமிதா சிறிய அளவிலேனும் மற்றவர்களுக்கு குறிப்பாய் திரைத்துறையில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களிடம் அன்பு காட்டி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார் என கேள்விப்பட்டுள்ளேன்.
இந்த நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் நடிகை சிநேகலதா போன்றவர்கள் நக்சல்பாரி இயக்கங்களுக்கு வெளிப்படையாய் உதவி அதன் காரணமாய் கொல்லப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூர்கிறேன்.

நிற்க. சில்க் சுமிதா நடித்த வண்டிச்சக்கரம் படத்திற்கு வினு சக்ரவர்த்தி கதாசிரியர் மட்டுந்தான். இயக்கம் கே. விஜயன் என்று அறிகிறேன்.

உங்களது கட்டுரைகளில் தொனிக்கும் இந்துத்துவா எதிர்ப்புக்கு என செவ்வணக்கங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக