வெள்ளி, 3 ஜூன், 2016

படிப்பு வாசனையற்ற எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்பா என்னையாவது படிக்க வைக்க வேண்டும் என கருதவில்லை. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் என்னை நெசவு வேலையில் ஒத்தாசைக்கு வைத்துக் கொண்டார். ஆனால், எனக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அவரிடம் சொல்லியும் பயனில்லாமல் போய் விட்டது. எனவே, டீக் கடைகள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முடி திருத்தும் கடைகள் என் வாசக சாலைகள் ஆயின. அந்த சின்ன ஊரில் இருந்த நூலகத்தில் அவ்வப்போது பாலகுமாரன்,சுஜாதா படிப்பதுண்டு. வீட்டுக்கெல்லாம் புத்தகங்கள் எடுத்து வர இயலாது. ‘என்னடா படிப்பு’ என திட்டு விழும். வளர்ந்த பிறகு, அப்பாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டு அதே ஊரில் தனியாக வசித்த சமயத்தில் தான் நக்சல்பாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. அதுதான், எனக்கு படிப்பதில் ஒரு ஒளிமயமான வாசலை திறந்து விட்டது. மார்க்சிய புத்தகங்கள் அறிமுகமாயின. அதில், முதலில் நான் படித்த புத்தகம் ஜார்ஜ் பொலிட்சரின் ‘மார்க்சிய மெய்ஞானம்’ புரிந்துக் கொள்ள சிரமமாய் இருந்தது என்றாலும், விடா முயற்சியும் சக தோழர்களில் ஒத்துழைப்பும் இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை கற்றுத் தந்தது. கூலி விலை லாபம், என்ன செய்ய வேண்டும், நாட்டுப் புற ஏழை மக்களுக்கு என வெறிப் பிடித்தது போல படித்தேன். பிறகு, வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமைதான் என்ன? போன்ற ராகுல்ஜியின் புத்தகங்களைப் படித்தேன். தாய், வீரம் விளைந்தது, அதிகாலையின் அமைதியில் போன்ற சோவியத் நாவல்கள் படித்தேன். கொஞ்ச நாட்களில், விசைத்தறிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு  தலைமறைவாய் இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் இரவெல்லாம் படிப்பு. பகலில் இயக்க வேலை என போய்க் கொண்டிருந்தது. அப்போது தோழர் மாவோவின் புத்தகங்கள் சிலவற்றை இயக்கத் தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். அவை இலங்கை தோழர்கள் மொழி பெயர்த்தவை. அது சோவியத்தும், சீனமும் முரண்பட்டிருந்த நேரம். லெனின் புத்தகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக் கடையில் சேலத்தில் கிடைக்கும். ஆனால், மாவோ புத்தகங்கள் அங்கெல்லாம் இருக்காது. இப்படி தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தால் தான் உண்டு. அதன் பிறகுதான் தோழர் ஸ்டாலின் எழுதிய புத்தகங்கள் ஒன்றிரண்டு கிடைத்தது. அவரது புத்தகங்களில் இன்றளவும் எனக்கு மிக பிடித்தமான புத்தகம் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல் வாதமும்’ என்று சொன்னால் மிகையில்லை. தலைமறைவு காலம் முடிந்ததும் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆயுள் தண்டனைக் கைதிகளாய் இருந்த தோழர்கள் திம்மகாளி, நாகரசம்பட்டி கோபால், ராதாகிருஷ்ணன் போன்றவர்களையும் தியாகுவின் மாமனார் லெனின் என்கிற ரங்கசாமியையும் சந்திக்க வேண்டி வந்தது. அவர்களில்,  தோழர் நாகரசம்பட்டி கோபால் எனக்கு மார்க்சிய இயக்கவியல் வகுப்பெடுத்தார். ஓரளவு நான் அவரிடம் தான் இயக்கவியல் பிழையின்றி கற்றுக் கொண்டேன். சிறை மீண்டு வந்ததும், இயக்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்து இயங்க முடியாத சூழலுக்கு இட்டுச் சென்றது. அது மேலும் என்னைப் படிக்கத் தோன்றியது. இந்த சமயத்தில் நான் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவில் இருந்து கடுமையாய் முரண்பட்ட தோழர் தமிழரசன் தேசிய இன பிரச்னைகளை முன் வைத்தார். அதனால், அவர் தனி இயக்கம் காண வேண்டி வந்தது. அவர் என்னை ஊருக்கே வந்து சந்தித்து என் கவனத்தை தேசிய இனப் பிரச்னையின் பால் திருப்பினார். ஆனால், அடுத்த சில மாதங்களில் பொன்பரப்பியில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்டார். நானும் இயக்கத்தை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு, சற்றேரக் குறைய இருபது வருடங்கள் படிப்பதும், எழுதுவதும் நின்று போனது. வாழ்க்கையில் வெறுப்பு தலை தூக்கிய அந்த நேரத்தில், மார்க்சியத்திற்கான நம் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தான் என் இயக்க வாழ்க்கையை எழுதினால் என்ன? என்று தோன்றியது. அதற்காக பல நாட்கள் தூக்கம் கெட்டேன். பல்வேறு யோசனைகள் எழுந்தன. அதில், இறுதியாய் தோன்றியது நாவல் வடிவில் இயக்க வாழ்க்கையை சொல்வது என்பதே சரியெனப் பட்டது. அதன் பின்னர், பல்வேறு நாவல்களை தேடிப் பிடித்துப் படித்தேன். அதில், என் மனதுக்குப் பிடித்த மொழி பெயர்ப்பு நாவலான ‘நினைவுகள் அழிவதில்லை’ என்னை செதுக்கியது எனச் சொல்லலாம். பஞ்சும், பசியும், மலரும் சருகும் உட்பட பல்வேறு நாவல்களைப் படித்தேன். தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் பலரது எழுத்துக்களை வாசித்து விட்டு, மீண்டும் ஒரு முறை மார்க்சிய நூல்களை படித்து விட்டுத்தான் தறியுடன் நாவல் எழுத ஆரம்பித்தேன். இதற்கெல்லாம் சில ஆண்டுகள் பிடித்தது. தறியுடன் நாவலுக்கு முதலில் நான் வைத்த பெயர் ‘தீப்பொறியாய் தறிகள்’ ஆனால், நாவலை தட்டச்சில் படித்த ஒரு சிலரில் தட்டச்சுக்காரரான ஜாபர்சாதிக் நாவலின் பெயரை மாற்றச் சொன்னார். அது சரியெனப் படவே  வேறு ஒரு நண்பரிடம்  பேச அவரும் தலைப்பை மாற்றச் சொன்னார். ஆனால், நாவலுக்கு முன்னுரை எழுதிய தோழர் கோவை ஈஸ்வரனுக்கு தலைப்பை மாற்றுவதில் உடன்பாடு இல்லை. பதிப்பாளர் திருப்பூர் குணாவும் பெயர் மாற்றைத்தை வலியுறுத்திச் சொல்ல  ‘தறியுடன்..’ என பெயர் மாறியது. அந்த நாவல் என் கையெழுத்தில் 1047 பக்கம் வந்தது. அது புத்தக வடிவில் வரும் போது மூன்றில் ஒரு பகுதிதான் வருமென நினைத்திருந்தேன். ஆனால், 780 பக்கம் வந்த போதுதான் என் கையெழுத்து  எவ்வளவு சின்னதென்று தெரிந்தது.  பெரிய நாவலாய் இருந்தாலும் வெளியிட்ட பின் அதை யாரும் பொருட்டாக சொல்லாதது ஆறுதலாய் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக